தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: கடந்த ஆண்டு இத்தனை போக்சோ வழக்கா?

தற்போது நடைபெறும் பாலியல் குற்றங்களை பார்த்தால், இந்த ஆண்டு அதையும் கடந்துவிடுமோ? என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: கடந்த ஆண்டு இத்தனை போக்சோ வழக்கா?
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அவ்வப்பேது வெளிச்சத்துக்கு வந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், அது தொடர்பான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்கவும் கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி தமிழக அரசின் உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு சிறப்பு பிரிவு ஐஜி கயல்விழி, காவல் துறை சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஐஜி, குழந்தைகள் நலத்துறை இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக பதிவாகி உள்ள குற்ற வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மேற்கெள்ளவேண்டும் என்று உள்துறை செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார். வழக்குகளை விரைவாக விசாரிக்க கூடுதலாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டுமா? என்பது குறித்தும் ஆராயுமாறு உத்தரவிட்டு இருந்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஈடுபட்ட 4,470 பேர் மீது பேக்சோ வழக்கு பதிவாகியுள்ளது. அது கடந்த ஆண்டு (2024) 6,920 ஆக உயர்ந்தது. தற்போது நடைபெறும் பாலியல் குற்றங்களை பார்த்தால், இந்த ஆண்டு அதையும் கடந்துவிடுமோ? என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே, தமிழக அரசு பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கி இருக்கும் நிலையில், அது யாரையும் பயமுறுத்தியதாக தெரியவில்லை. எனவே, பாலியல் குற்றவாளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்பது பெண்கள் நல அமைப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com