

சென்னை,
சென்னையில் தாயின் 2-வது கணவரான தலைமை காவலர் ஒருவர், தனது வளர்ப்பு மகளையே கடந்த சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக எழுந்துள்ள புகார் காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 21 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக இன்று (திங்கட்கிழமை) பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது தாயாரை 2-வது திருமணம் செய்து கொண்ட தலைமை காவலர், தனக்கு 17 வயது இருக்கும் போதிலிருந்தே கடந்த 5 வருடமாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூரம் குறித்து வெளியில் சொன்னால், பெண்ணின் தாயைக் கொலை செய்து விடுவதாக தலைமை காவலர் மிரட்டியுள்ளார். இதனால் உயிருக்கு பயந்து, இத்தனை காலம் யாரிடமும் கூறாமல் உண்மையை மறைத்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தான் ஒரு இளைஞரைக் காதலிப்பதாக அந்த பெண் வீட்டில் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை காவலர், அந்த பெண்ணைக் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்தே, பொறுமையிழந்த அந்த பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இளம்பெண்ணின் இந்த பகீர் புகாரைத் தொடர்ந்து, பெரவள்ளூர் போலீசார் சம்பந்தப்பட்ட தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய தலைமை காவலர் ஒருவரே, தனது வளர்ப்பு மகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.