

கரூர்,
கரூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்ட்ரிங் தொழிலாளியை, சிறுமியின் பாட்டி அரிவாளால் வெட்டி காவல் நிலையத்திற்கு இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவழியில் திரண்ட உறவினர்களும் அவரை சரமாரியாக தாக்கியதால், படுகாயமடைந்த தொழிலாளி பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 31). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து தனது பாட்டியிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி ஆத்திரமடைந்தனர்.
இந்த நிலையில், ஆத்திரத்தை அடக்க முடியாத சிறுமியின் பாட்டி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொண்டு நேராக மாணிக்கத்திடம் சென்றுள்ளார். அங்கு அவரிடம் சண்டையிட்ட பாட்டி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணிக்கத்தை வம்படியாக பிடித்து இழுத்து கொண்டு, அவர் காவல் நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினார்.
அவர் நடுவழியில் இழுத்து செல்லப்படுவதை பார்த்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். மாணிக்கத்திற்கு பாட்டி தண்டிப்பதை கண்ட அவர்களும் ஆத்திரமடைந்து, நடுரோட்டிலேயே அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் மாணிக்கத்திற்கு தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்து மாணிக்கத்தை மீட்டனர்.
பலத்த காயங்களுடன் இருந்த அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த மாணிக்கம் மீதும், சட்டத்தை கையில் எடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.