

திருவொற்றியூர்,
திருவொற்றியூரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளியை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த ராகுல் என்பவர், தனது நண்பர்களுடன் திருவொற்றியூரில் வாடகை வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று கீழ் வீட்டில் வசித்து வரும் பானி பூரி விற்பனையாளரின் 6 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, ராகுல் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் ராகுலை சிறுமி அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், ராகுலை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
அவருடன் தங்கியிருந்த சித்தரஞ்சன் என்பவரையும் பொதுமக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகுலை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது