சிறுமியிடம் பாலியல் சீண்டல் - போக்சோ குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்சோவில் கைது செய்யப்பட்ட ரமேஷிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படது.
திருநெல்வேலி,
காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு, நவ்வலடி கிழக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்ய முயற்சி செய்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், உவரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்று (25.06.2025) ரமேஷிற்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உவரி காவல்துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷாவையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025 ஆம் வருடத்தில் மட்டும் இதுவரை 10 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 10 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது, அதில் குறிப்பிடதக்க வகையில் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






