

சென்னை,
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பிரபல சினிமா பின்னணி பாடகி. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது மகளை 6 வயதில் சென்னையில் வசிக்கும் எனது தங்கை வீட்டில் வளர்ப்பதற்காக விட்டேன். தற்போது எனது மகளுக்கு 15 வயது ஆகிறது. எனது தங்கையின் பராமரிப்பில் சென்னையில்தான் படிக்கிறாள். எனது தங்கை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கோவிலுக்கு செல்வது வழக்கம். எனது மகளையும் அங்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு வேலை பார்க்கும் மதபோதகர் ஹென்றி (வயது 40) எனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு எனது தங்கை, தங்கையின் கணவர் மற்றும் தங்கை கணவரின் தம்பி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுபற்றி எனது மகள் என்னிடம் சொல்லி கதறி அழுதாள். நான் சென்னை வந்து விசாரித்தபோது, அனைத்தும் உண்மை என்று தெரியவந்தது.
போக்சோ சட்டத்தில் வழக்கு
எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த எனது தங்கை, அவரது கணவர் மற்றும் தங்கை கணவரின் தம்பி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சசிமோகன், உதவி கமிஷனர் ராஜ்மோகன் ஆகியோர் மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினார். மதபோதகர் ஹென்றி, சிறுமியின் சித்தி, சித்தியின் கணவர் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பண்ணை வீட்டில் கைது
மதபோதகர் ஹென்றி உள்பட குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போனை கண்காணித்தபோது, அவர்கள் திண்டிவனத்தில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. திண்டிவனத்தில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கி இருந்தனர்.
ஹென்றி உள்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சொத்துப்பிரச்சினை காரணமாக எனது அக்கா பொய்ப்புகார் கொடுத்துள்ளார். அதை சட்டப்படி கோர்ட்டில் சந்திப்பேன், என்று பின்னணி பாடகியின் தங்கை கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் கூறினார்கள். பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் மாஜிஸ்திரேட்டு மூலம் ரகசிய வாக்குமூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.