

சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அவருக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் தலைமறைவானார். மாயமான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர். பெங்களூருவில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது சிறையில் அடைத்தனர். மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தப் புகாரில் ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில், மேலும் இரண்டு பிரிவுகளையும் சேர்த்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.