பாலியல் வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - அ.தி.மு.க. மகளிரணி கூட்டத்தில் தீர்மானம்

மின்வெட்டை முற்றிலுமாக போக்கிடும் வகையில், போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டன.
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

மின்வெட்டை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட 6 தீர்மானங்கள் அ.தி.மு.க. மகளிரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மகளிரணி ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. மகளிர் அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மகளிரணி செயலாளர் பா.வளர்மதி செய்திருந்தார்.

அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மகளிரணி சபதம்

* ஜெயலலிதா வழியில், அ.தி.மு.க.வுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த சோதனையில் இருந்து விரைவில் மீண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, எடப்பாடி பழனிசாமியின் கட்டளைகளை ஏற்று, மகளிர் அணியினர் அனைவரும் இரவு, பகல் பாராமல் அயராது கட்சி பணியாற்றுவது என உறுதி ஏற்பு.

எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையில், என்றென்றும் கட்சிப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் ஈடுபடுவது என மகளிர் அணி சபதமேற்கிறது. பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை

* சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள் தொடர்பான வியூகங்களை வகுத்து கொடுத்ததோடு, கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமியால், அ.தி.மு.க. 47 இடங்களிலும்; கூட்டணி கட்சிகள் 6 இடங்களிலும்; ஆக மொத்தம் 53 இடங்களில் வென்றது.

* பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சூழ்நிலையை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்குவதற்கு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க. அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டும்

* த.வெ.க. அரசு, கல்லூரி மாணவர் சேர்க்கைகளுக்கு இன்றுவரை சரியான வழிமுறை வழங்காத காரணத்தினால், இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 60 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அரசு தலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 45 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது.

தகுதியான தேர்வர்களை நீக்கிவிட்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சாதகமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

மின்வெட்டை தடுக்க நடவடிக்கை

* புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ‘இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்' என்று சாக்கு போக்கு சொல்லாமல், மின்வெட்டை முற்றிலுமாக போக்கிடும் வகையில், போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* அ.தி.மு.க. எனும் மக்கள் இயக்கம், தலைமுறைகளைக் கடந்து பயணித்து வரும் மாபெரும் பேரியக்கமாகும். இந்த இயக்கத்தை எந்த வகையிலும் பலவீனப்படுத்திவிட முடியாது என்பதை இக்கூட்டம் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com