

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 35). இவரை குற்ற வழக்குகளில் கல்லல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவருக்கு கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கழித்து, ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ராஜ்குமார் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.
அந்த பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். அதனால் ராஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த வேறு சில பெண்களுக்கும் அவர் தொந்தரவு கொடுத்ததாக கூறி, கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தை சந்தித்து, எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ராஜ்குமாரை உடனே கைது செய்ய வேண்டும் என மனு அளித்தனர். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மனு கொடுக்க திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.