தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சண்முகம் தரப்பு முடிவு?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சண்முகம் தரப்பினர்.
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சண்முகம் தரப்பு முடிவு?
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்து முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று விட்டார்.

இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தோடு களமிறங்கிய அ.தி.மு.க. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுமட்டுமின்றி அந்த கட்சி 3-வது இடத்தை பிடித்ததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் சட்டசபையில் இழந்தது.

இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட் டுமின்றி சட்டசபை தலைவராகவும் எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 3 நாட்களாக சென்னையில் இருதரப்பும் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தை தனித்தனியாக நடத்தி வருகின்றனர். அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியதோடு, நான்தான் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் என்றும் உறு தியாக இருக்கிறார். அவருக்கு சில மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதனை ஏற்க மறுத்து இருக்கின்றனர்.

அதோடு அவர்கள் தங்களுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. எனவே அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக எஸ்.பி.வேலுமணிதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

மேலும் அவர்கள் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். அதோடு அவர்கள் விஜய்யின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின்போது த.வெ.க.வுக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்து அமைச்சரவையிலும் இடம் பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது.

இந்தநிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உட்பட 24 எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை முதல்-அமைச்சர் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

தவெக அமைச்சரவையில் இடம்பெறவும் சி.வி.சண்முகம் தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக எம்எல்ஏக்களில் 3ல் 2 பங்கு ஆதரவு தங்களுக்கு உள்ளதாக சி.வி.சண்முகம் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுகவினர் இரு தரப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com