

சென்னை,
'ஜெம் கிரானைட்' தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடைய காமக்களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வீரமணியின் பாலியல் லீலைகளுக்கு இவர்கள் 2 பேரும் தங்களுடைய வீட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதைபோல வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணி தொடர்பான ஆபாச வீடி யோக்கள் கணேசனின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் கிரானைட் வீரமணி உடன் கைதான சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய இருவரும் ஜாமின் கோரி சென்னை போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 2019-ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 6 ஆண்டுகள் தாமதமாக 2025, அக்டோபர் 7ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு எந்த விளக்கமும் இல்லாததால், வழக்கில் சந்தேகம் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட எந்த சிறுமிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கைது செய்யப்பட்டு 3 வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை தங்களை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை; நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என அதில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு, நீதிமன்ற நடுவர் (Magistrate) முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை; சட்டப்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டது என வாதிடப்பட்டது.
தொடர்ந்து வழக்கு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஜாமின் கோரிய மனுக்கள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.