கரூரில் வருமானம் இல்லாமல் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தவிப்பு

பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால் கரூரில் வருமானம் இல்லாமல் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தவித்து வருகின்றனர்.
கரூரில் வருமானம் இல்லாமல் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தவிப்பு
Published on

ஷேர் ஆட்டோக்கள்

கருர் மாநகரத்தில் மொத்தமாக 35-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது அவசர தேவைக்கு ஷேர் ஆட்டோவைத்தான் முழுமையாக நம்பியுள்ளனர். கரூர் பஸ்நிலையத்தில் இருந்து தினந்தோறும் லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோணிமலை, காந்திகிராமம், அரசு மருத்துவக்கல்லூரி, ரெயில் நிலையம், ஆத்தூர் பிரிவு சாலை போன்ற பகுதிகளுக்கு சவாரி சென்று வருகின்றன. கரூர் மாநகரத்தில் மொத்தம் 50 ஆட்டோக்களுக்கு பெர்மிட் உள்ளது. ஆனால் இந்தப்பகுதிகளில் தினந்தோறும் 35 ஷேர் ஆட்டோக்கள் தான் இயங்கி வருகின்றன.

10 ரூபாய் கட்டணம் நிர்ணயம்

கரூர் மாவட்டத்தில் பயணிகள் ஷேர் ஆட்டோவில் எங்கு ஏறி இறங்கினாலும் 10 ரூபாய்தான் வசூல் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பஸ்கள் மற்றும் மினிபஸ்களை தவிர்த்து விட்டு ஷேர் ஆட்டோவில் செல்வதைத்தான் விரும்புகிறார்கள். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனாலும் சில ஆட்டோ டிரைவர்கள் மேற்படி 10 ரூபாய் கட்டணம் மிகக்குறைவுதான் என்கிறார்கள். ஆனாலும் இதை நாங்கள் ஒரு பொதுமக்கள் சேவையாகத்தான் செய்துவருகிறோம். இதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது பீக் ஹவர்ஸ் என்கிற காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அவர்கள் செல்கிற இடங்களில் இறக்குகிறோம்.

ஆட்டோவுக்குதான் மவுஸ்

மேற்படி ஷேர் ஆட்டோ பயணம் என்பது தற்போதைய காலத்தில் பொதுமக்கள் பார்வையில் மிக்குறுகிய பயணம் என்றே நினைக்கிறார்கள். இதனால் ஷேர் ஆட்டோ பயணம்தான் அவர்களுக்கு எப்போதுமே மவுஸ் உண்டு. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக பொதுமக்கள் மற்றும் பெண்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பல நன்மைகளும் சில ஒரு சில தீமைகளும் மற்ற இடத்தில் பரவலாக பேசப்படுகின்றன. அந்த வகையில் கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து தினந்தோறும் பொதுமக்களும், பயணிகளும் உழவர் சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், தாந்தோணிமலை, பைபாஸ் ரோடு மற்றும் ஆத்தூர் பிரிவு சாலை வரை சென்று பயணிக்கின்றனர். மேலும் ஒரு சில ஆட்டோக்கள் கரூர் ரயில்வே ஸ்டேஷன் வரையும் சென்று வருகின்றன.

கட்டணம் குறைவு ஆனால் காலதாமதம்

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த மங்கையர்க்கரசி மருதநாயகம் என்பவர் கூறுகையில், பொதுவாக நாங்கள் பயணம் செய்வதற்கு மினிபஸ்சைத்தான் நம்பி உள்ளோம். ஆனால் அவை குறித்த நேரத்துக்கு எடுக்காமல் காலம் தாழ்த்துவதால் வேறு வழியில்லாமல் ஷேர் ஆட்டோவைத்தான் நாட வேண்டியுள்ளது. மேலும் ஒருசில மினிபஸ்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்லமுடியவில்லை. இதனால் நாங்கள் வேலைக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

சரியான நேரத்திற்கு அலுவலகமோ, மற்ற இடங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் நாங்கள் ஷேர் ஆட்டோவைத்தான் நம்பியுள்ளோம். மேலும், ஒருசில ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோவில் தங்கள் ஆட்டோவில் முழுமையாக பயணிகள் ஏறிய பின்புதான் எடுக்கின்றனர். இது மட்டு தான் குறைபாடு. மற்றபடி இதில் எங்கு ஏறி இறங்கினாலும் 10 ரூபாய் தான் வாங்குகிறார்கள். இதனால்தான் எனக்கு இந்தப் பயணம் பயனுள்ளதாக உள்ளது, என்றார்.

வருமானம் போதவில்லை

கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணேஷ் கூறுகையில், கரூர் பகுதியில் நான் தினந்தோறும் 10 நடைகள் சவாரி செய்து வருகின்றேன். நாள்தோறும் 400 ரூபாய் முதல் 500 ரூபாய்தான் வருமானம் உள்ளது. ஆனால் தற்போது டீசல் விற்கின்ற விலைக்கு இந்த வருமானம் போதவில்லை. அதுவும் பெண்களின் இலவச பஸ் பயண திட்டத்தால் பெண் பயணிகள் சவாரி செய்ய வருவதில்லை. இதனால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.

பயணிகள் சீட் நிரம்பியபின்னர்தான் இயக்குகின்றனர்

புலியூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கூறுகையில், ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவில் முழுமையாக ஆட்டோ முழுமையாக பயணிகள் சீட் நிரம்பிய பின்னர்தான் வண்டியை எடுக்க தொடங்குகின்றனர். காலை வேலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பெண்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். ஆனால் மினி பஸ்கள் தற்போது மிக குறைவான வேகத்திலேயே ஊர்ந்து செல்கின்றன. மேலும் ஒரு சில மினி பஸ் டிரைவர்கள் ஒரு சில நிறுத்தத்தில் மிக நீண்ட நேரமாக பயணிகளுக்காக காத்துக் கிடக்கின்றன.

இதனால் வேலைக்கு செல்வோரும் மருத்துவமனைகளுக்கு செல்வோரும், பொதுமக்களும் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இதனை தவிர்க்கவே பல ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை காலை வேளையில் சரியான நேரத்துக்கு சென்று பொதுமக்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்துக்குள் இறக்கி விடுகின்றனர். இதனால் பெரும்பாலான பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். கட்டணமும் பத்து ரூபாய் தான் இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் பயணிகளும் வெளி பஸ்களை விட ஷேர் ஆட்டோக்களைத்தான் அதிகம் நம்பியுள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com