ஆட்சியில் பங்கு: திமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் காங்கிரஸ் கட்சியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
சென்னை,
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் திமுகவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நிலைப்பாடு. ஆனால், தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டு ஆட்சியை இழந்த காங்கிரஸ், அதன்பிறகு 58 ஆண்டுகள் ஆன பிறகும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
திமுக, அதிமுக என்றே மாற்றி.. மாற்றி.. கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால், எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், வரும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற மாற்று சக்தி ஒன்று இருக்கிறது.
அதுவும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும் என்று கூறியுள்ளார். இதுபோன்று மாற்று வழி இருப்பதால், இந்த முறை ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விட்டுவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது.
ஏற்கனவே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போன் மூலமும், தேசிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரிலும் விஜயை சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் காங்கிரஸ் கட்சியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
யாருக்கு வாக்கு?” – ஐ.பி.டி.எஸ். தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






