

சென்னை,
தமிழகத்தில் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் தனது பதவி காலத்தில் நடந்த பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் குறித்த நிகழ்வுகளை தொகுத்து புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்துக்கு அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் வெளியிட்டனர்
இந்த புத்தகம் மொத்தம் 12 அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு சம்பவத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளார். முதல் 3 அத்தியாயங்களில் ஜெயலலிதா பற்றி எழுதியுள்ளார்.
6-வது அத்தியாயத்தில் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா மற்றும் ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரி இருந்தது பற்றிய தகவல்களை மிகவும் விறுவிறுப்புடன் வித்யாசாகர் ராவ் எழுதியிருக்கிறார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, பிப்ரவரி மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஓ.பி.எஸ். பதவி விலகியதும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் சட்டசபை கட்சித் தலைவராக சசிகலா தேர்வானார். ஆனால் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வித்யாசாகர் ராவ் அவசரம் காட்டவில்லை.
சசிகலாவை முதல்-அமைச்சராக பதவி ஏற்க வரும்படி வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்கவில்லை. சசிகலா மிரட்டும் தொனியில் அறிக்கை விட்டபோது கூட அவர் அதை கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ள வித்யாசாகர் ராவ், அந்த சமயத்தில் சசிகலாவை அழைக்காதது ஏன்? என்பது பற்றியும் எழுதியுள்ளார்.
சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் கவர்னர் அவசரப்பட வில்லை. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட இருந்ததால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தார். அந்த முடிவின்படி செயல்பட்டதால் அவர் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.