குமரியில் சிவாலய ஓட்டம் நிறைவு: 12 கோவில்களிலும் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்

குமரியில் சிவாலய ஓட்டம் நேற்று நிறைவடைந்தது. பக்தர்கள் 12 கோவில்களிலும் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
குமரியில் சிவாலய ஓட்டம் நிறைவு: 12 கோவில்களிலும் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்
Published on

நாகர்கோவில்,

சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓடியும், நடந்தும் சென்று சாமியை வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.

நேற்று முன்தினம் மாலையில் 12 சிவாலயங்களில் முதல் தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் சிவ பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து கையில் பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். முன்சிறை என்ற திருமலையில் தொடங்கிய ஓட்டம், 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயம் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெற்றது.

அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெட்டுமணி, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் ஆகிய 12 சிவாலயங்களுக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் தொடங்கிய சிவாலய ஓட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போது அங்குள்ள நீர் நிலைகளில் நீராடி சாமி கும்பிட்டு பிரசாதம் வாங்கிவிட்டு அடுத்த கோவிலை நோக்கி சென்றனர். இரவு முழுவதும் தொடர்ந்து 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் கால்நடையாக நடந்தும், ஓடியும் தரிசனம் செய்தனர்.

ஓட்டத்தின் போது கோவிந்தா... கோபாலா... என்று சரணம் கோஷம் எழுப்பி ஒவ்வொரு கோவிலாக சென்று 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்தனர். இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றிவந்தனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் நேற்று இருசக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து கோவிலில் சாமி கும்பிட்டனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com