

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முதியோர் இல்லத்துக்கு ரூ.4.3 லட்சம் மின்கட்டணம் வந்ததால் அந்த இல்ல பொறுப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்மா காலனி பகுதியில் ஆதரவற்றவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்திற்கான இந்த மாத மின்கட்டணம் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 743 கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ரூ.7 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது வந்த மின்கட்டண குறுஞ்செய்தி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
இதுகுறித்து முதியோர் இல்ல காப்பாளர் பூங்கோதை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மின்வாரிய கணக்கீட்டு பிரிவு அதிகாரிகள் முதியோர் இல்லத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கணக்கீட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருளில் (சாப்ட்வேர்) ஏற்பட்ட குளறுபடியே இந்த தவறுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து முதியோர் இல்லத்திற்கான மின்கட்டணம் ரூ.15 ஆயிரத்து 205 என்று கணக்கிடப்பட்டு முதியோர் இல்ல காப்பாளருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.