மதுரை: சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த தந்தை அதிரடி கைது

பாண்டிராஜன் தனது மகனின் கையில் மதுக்கோப்பையைக் கொடுத்து அதில் மதுவை ஊற்றி குடிக்கச் செய்துள்ளார்.
பெற்ற தந்தையே  சிறுவயது மகனுக்கு மது ஊற்றி குடிக்க செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது
Published on

மதுரை,

மதுரையில் தந்தை ஒருவர் தனது சிறுவயது மகனுக்கு மது ஊற்றித் தந்த கொடூரமான செயலுக்கு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

சிறுவன் மது அருந்துதல்

மதுரை அருகே உள்ள டி.கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிராஜன். இவர் மதுபோதைக்கு அடிமையானவர். இந்த நிலையில் அவர் பொது இடத்தில் வைத்து மது அருந்தியதோடு, தனது சிறுவயது மகனின் கையில் மதுக்கோப்பையைக் கொடுத்துள்ளார். பின்னர், அவரே அதில் மதுவை ஊற்றி அந்த சிறுவனை மதுவை குடிக்கச் செய்தார்.

வாக்குவாதம்

அதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் “சிறுபிள்ளைக்கு ஏன் மது கொடுக்கிறீர்கள்? ”என்று கோபத்துடன் கண்டித்தனர். ஆனால் அதற்குப் பாண்டியராஜன் சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி, “என் பிள்ளைக்கு நான் கொடுக்கிறேன், நீ யாரு?” என்று பொறுப்பற்ற முறையில் வாக்குவாதம் செய்தார்.

வீடியோ வைரல்

மேலும், இந்த செயலை ஏதோ மிகவும் இயல்பான ஒன்று போலப் பேசி நியாயப்படுத்தினார். இந்த கொடூரச் சம்பவத்தை அங்கிருந்த பலர் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கடும் ஆத்திரம் அடைந்தனர். மேலும் அவரை கைது செய்யுமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

கைது

இதையடுத்து, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் டி.கல்லுப்பட்டி போலீசார் உடனடியாகச் செயல்பட்டு , குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜனைக் கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com