அதிர்ச்சி சம்பவம்: 'என் மரணத்திற்கு ஆசிரியர்தான் காரணம்' - கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த மாணவர்

பள்ளியின் முன்பு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சி சம்பவம்: 'என் மரணத்திற்கு ஆசிரியர்தான் காரணம்' - கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த மாணவர்
Published on

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. இந்த தம்பதிக்கு ஸ்ரீராம் என்ற ஒரு மகன் இருந்தார். இவர், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவர் ஸ்ரீராம் படித்த பள்ளியின் வகுப்பு ஆசிரியர் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சிம்காஸ். இவர், ஸ்ரீராமை திட்டியதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்பு ஆசிரியர் தன்னை திட்டியதால் அவமானம் அடைந்த ஸ்ரீராம், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் ஸ்ரீராம் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீராம், மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூச்சல் போட்டனர். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீராமை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்டதும் ஸ்ரீராமின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே ஸ்ரீராம், தான் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அந்தக் கடிதத்தில், என் வகுப்பில் படிக்கும் சக தோழியிடம் நான் நட்பாக பேசுவதை பார்த்த எனது வகுப்பு ஆசிரியர், அதை தவறாக புரிந்து கொண்டார்.

இதன் காரணமாக என்னை சக மாணவர்கள் முன்பு தகாத வார்த்தைகளால் திட்டியதால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். நான் எடுத்த தற்கொலை முடிவுக்கு காரணம் என் வகுப்பு ஆசிரியர் மட்டும்தான் என அதில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீராமின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தனது மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு வகுப்பு ஆசிரியர்தான் காரணம் என்பதை அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஸ்ரீராம் படித்த பள்ளியின் நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் ஸ்ரீராமின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சிம்காசை கைது செய்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக மாணவர் ஸ்ரீராம் எழுதி இருந்த கடிதம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com