அதிர்ச்சி சம்பவம்: மகனை கொன்று இளம்பெண் தற்கொலை.. காரணம் என்ன?

தொட்டிலில் குழந்தை அசைவற்று இருப்பதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிர்ச்சி சம்பவம்: மகனை கொன்று இளம்பெண் தற்கொலை.. காரணம் என்ன?
Published on

ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு காந்திபுரத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 32). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அமராவதி (28). இவர்களுக்கு 1 வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் இரவு குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தம்பதி இருவரும் தூங்கினர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அருகே தூங்கிக்கொண்டு இருந்த மனைவி அமராவதியை காணாமல் கவின்குமார் திடுக்கிட்டார். சமையல் அறைக்கு சென்றபோது. அங்கு வீட்டின் விட்டத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் அமராவதி தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அவர் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் கவின்குமாரின் தாய், தந்தையும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாசோதனை செய்த டாக்டர்கள் அமராவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே தொட்டிலில் குழந்தையும் அசைவற்று இருப்பதை கண்டனர். உடனே குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

குழந்தையின் உடலிலோ அல்லது அமராவதியின் உடலிலோ எந்த காயங்களும் இல்லை. அதனால் அமராவதி தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையின் முகத்தை தலையணையால் அழுத்தி கொன்று இருக்கலாம். பின்னர் சமையல் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பிறகு ஏன் அமராவதி குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை. கடன் தொல்லையா? அல்லது அமராவதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com