திருச்சியில் கொள்ளை வழக்கில் கைதான பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

திருச்சியில் கொள்ளை வழக்கில் கைதான பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சியில் கொள்ளை வழக்கில் கைதான பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
Published on

திருச்சியில் கொள்ளை வழக்கில் கைதான பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 38). இவரது தம்பி சோமசுந்தரம் (27). ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உய்யகொண்டான் திருமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக குழுமாயி அம்மன் கோவில் அருகே 2 பேரையும் போலீசார் அழைத்துச்சென்றனர். அப்போது அவர்கள், போலீசாரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதைத்தொடர்ந்து தற்காப்புக்காக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

பெண் உள்பட 3 பேர் கைது

இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தற்போது, இருவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் உறையூர் சீனிவாசா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் அறிவழகன் வீட்டில் 30 பவுன் நகைகளை 2 ரவுடிகளும் கொள்ளையடித்ததும், அவர்களுடன் ஹரிஹரன், வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், கொள்ளையடித்த நகைகளை உறையூர் சண்முகாநகரை சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி அனுராதா (43) என்பவரது வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உறையூர் போலீசார் அனுராதா, ஹரிஹரன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அனுராதா வீட்டில் இருந்து 20 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டது.

திடுக்கிடும் தகவல்

இந்தநிலையில், கைதான அனுராதாவுக்கும், ரவுடி துரைசாமிக்கும் இடையிலான தொடர்பு குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது, 2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பாதி விலைக்கு நகைகளை வாங்கித்தருவதாக பலரிடம் அனுராதா பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பின்னர் பணம் கொடுத்தவர்கள் அவரை துரத்தியபோது ரவுடி துரைசாமியிடம் அடைக்கலம் புகுந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சையில் இருக்கும் ரவுடிகளை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது தான், துப்பு துலங்காத பல வழக்குகளுக்கு விடை கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com