

சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (10.11.2026) சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு ஆகிய பிரிவுகளில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், கழிவறைப் பகுதிகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இம்மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவினை பயோமெட்ரிக் முறையில் பதிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் விவரங்கள், அவர்களின் பணி விவரங்கள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் இம்மருத்துவமனையில் அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் (CEmONC ) அமைக்க தேவையான வசதிகள் மற்றும் உபகரணங்கள் குறித்து கேட்டறிந்து, மருத்துவமனையில் CEmoNC மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
பின்னர் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனை 262 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களுடைய பிரசவத்திற்காக திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 24 மணிநேரமும் மகப்பேறு சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 83 பயிற்சி மருத்துவர்கள் உள்ளனர். விரைவில் இம்மருத்துவர்களுக்கான பணிகள் முறைப்படுத்தப்பட்டு மருத்துவமனை 24 மணிநேரமும் இயங்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் கிராமப்புற பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணைகள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சுத்தமான நீர் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் போதிய அளவில் பணியமர்த்தப்பட்டு நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ECR பி. சரவணன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஏ. அரவிந்த், மருத்துவமனையின் கூடுதல் நிலைய அலுவலர் டாக்டர் கிறிஸ்டி ஜெயமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.