கீமோதெரபி மருந்துகள் தட்டுப்பாடு; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

புற்றுநோய் என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையும் மனநிலையையும் கடுமையாக பாதிக்கும் நோயாகும்.
ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் முக்கிய கீமோதெரபி மருந்துகளான சிஸ்பிளாட்டின் மற்றும் கார்போபிளாட்டின் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். இந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விலை உயர்விற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது, மருந்துத் தட்டுப்பாடு என்பது உண்மையான பிரச்சினை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருப்பதை காட்டுகிறது. மருந்துகளின் தரத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பது அவசியம். ஆனால் அதே நேரத்தில், புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க நோயாளிகளின் வாழ்வாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கீமோதெரபி மருந்துகள்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளையே நம்பி சிகிச்சை பெற்று வருகின்றனர். பல குடும்பங்கள் சிகிச்சை செலவுகளால் கடன் சுமையில் சிக்குகின்றன. இந்நிலையில் கீமோதெரபி மருந்துகளின் விலை உயர்வு நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு விலை உயர்விற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, அதே நேரத்தில் பின்வரும் நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான அளவில் சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின் உள்ளிட்ட அனைத்து கீமோதெரபி மருந்துகளையும் மானிய விலையில் வழங்க வேண்டும்.

இலவச சிறப்பு திட்டம்

ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை இலவசமாக வழங்கும் சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் கீழ் இந்த மருந்துகளின் முழு செலவையும் அரசு ஏற்க வேண்டும். மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நீண்டகால திட்டங்களை வகுக்க வேண்டும்.

மருந்து விலை உயர்வு

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்து விலை உயர்வால் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் விலை கண்காணிப்பு மற்றும் விநியோக கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து புற்றுநோய் சிகிச்சை மையங்களிலும் இந்த மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். புற்றுநோய் என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையும் மனநிலையையும் கடுமையாக பாதிக்கும் நோயாகும். மருந்து உற்பத்தியாளர்களின் நலனும் முக்கியம்; அதே அளவில் நோயாளிகளின் உயிரும் முக்கியம். எனவே மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகளுடன், ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை பாதிக்கப்படாத வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். "மருந்து உற்பத்தி வளர வேண்டும்; அதே நேரத்தில் நோயாளியின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்" என்பதே இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com