கால்நடை மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கால்நடை மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு
Published on

மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு, குமணன்தொழு உள்ளிட்ட 7 கிராமங்களில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில், கடந்த சில மாதங்களாக கால்நடைகளுக்கான மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

எனவே நோய் தாக்குதலுக்கு உள்ளாகி கால்நடைகளுடன் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவர்களிடம் மருந்து, மாத்திரைகளின் பெயரை எழுதி வாங்கி அதனை தனியார் மருந்து கடைகளில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்கிடையே கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த மாதம் பெய்த சாரல் மழை காரணமாக நாட்டுக்கோழிகளுக்கு மர்ம நோய் தாக்கியது. அந்த சமயத்தில், மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லாததால் ஏராளமான கோழிகள் பரிதாபமாக இறந்தன.

காலிப்பணியிடங்கள்

இதேபோல கால்நடை மருத்துவமனைகள் மூலம் ஆடு, மாடுகளுக்கு தாது உப்பு மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவற்றை கடந்த ஒரு ஆண்டாக வழங்கவில்லை.

மேலும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனைக்கருத்தில் கொண்டு கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்பி தேவையான அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com