

சென்னை,
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200-ஆக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு திருச்சி, பெரம்பலூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக தினமும் 8 முதல் 10 லாரிகளில் சுமார் 100 டன் சின்ன வெங்காயம் மார்க்கெட்டுக்கு வரும்.
தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தினமும் 2 லாரிகளில் 20 டன் சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இன்று மேலும் உயர்ந்து ரூ.180-க்கு விற்பனையானது.
கோயம்பேடு சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.200-க்கும், வெளி மார்க்கெட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.250 வரையிலும் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.80 வரை விற்கப்படும் நிலையில், சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு காரணமாக ஓட்டல்களிலும் சின்ன வெங்காயத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.
பிற காய்கறிகளின் விலை நிலவரம் (மொத்த விற்பனை - ஒரு கிலோ):
• அவரைக்காய், முருங்கைக்காய்: ரூ.100
• பீன்ஸ், நைஸ் கொத்தவரங்காய்: ரூ.70
• பெரிய வெங்காயம்: ரூ.65
• உஜாலா கத்தரிக்காய், பன்னீர் பாகற்காய்: ரூ.60
பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரி கார்த்திக் கூறுகையில், "மழை பாதிப்பால் வரத்து குறைந்துள்ளதால் இனிவரும் நாட்களில் சின்ன வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழை பாதிப்பு இல்லாமல் இருந்தால் தை மாதத்தில் புதிய அறுவடை தொடங்கும். அதன் பிறகே விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.