

சென்னை,
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து சிபிஎஸ்இ இணைவு பெற்ற பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு இணங்க இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே (பொதுவாக ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநிலத்தின் தாய்மொழி) முதன்மை மொழிப் பாடங்களாகப் படித்து தேர்வெழுதி வந்தனர். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே மூன்றாவது மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.
ஆனால் புதிய நடைமுறை அமலுக்கு வரும்போது, மாணவர்கள் கூடுதலாக மற்றொரு மொழியையும் தேர்வு செய்து, மொத்தம் மூன்று மொழிகளைக் கட்டாயம் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, சிபிஎஸ்இ அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, சிபிஎஸ்இ அமைப்பு மீறியிருக்கிறது.
சிபிஎஸ்இ அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.