திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்கலாமா? - மார்க்சிஸ்ட் ஆலோசனை

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்கலாமா? - மார்க்சிஸ்ட் ஆலோசனை
Published on

சென்னை,

தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடியிருக்க்கிறது. திமுகவுடன் நான்கு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக ஐந்து தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது.நேற்று முன் தினம் திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் நிலை இருப்பதால் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் செயற்குழு கூட்டம் இன்று கூடியிருக்கிறது. முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்துகள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டுக்கொண்டு இன்று முடிவு எடுக்கப்படும்.நேற்று முன்தினம் நடந்த மாநிலக்குழுவில் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை செயற்குழுவிற்கு மாநிலக்குழு வழங்கியுள்ளது. தற்போது செயற்குழுவில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்பு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com