

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் டெல்லியில் நேற்று மாலை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.
மத்திய மந்திரி சந்திப்பு குறித்து டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க, மத்திய மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து சில திட்டங்கள் குறித்து பேசினோம். குறிப்பாக நாட்டில் அமைக்கப்பட உள்ள 7 புதிய ஜவுளி பூங்காக்களில் 2 ஜவுளி பூங்காக்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என கேட்டோம். இதைப்போல நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை எடுத்துரைத்தோம். சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பதையும், கோர்ட்டில் வழக்குகள் உள்ளன என்பதையும் கூறினோம். மேலும், தமிழகத்துக்கு வாரம் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை மந்திரியிடம் வலியுறுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து வலியுறுத்தி இருந்தோம். அவரும் தருவதாக சொன்னார். எனவே, நிச்சயமாக வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.