

சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் பேசியதாவது;
"சட்டசபையில் கன்னியத்துடன் நடந்துகொள்வது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். சட்டசபைக்கு நாங்கள் எல்லோரும் புதியவர்கள். சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்துகொள்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதை ஏற்றுக்கொள்கிறோம்.
அதே சட்டசபை கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித்தலைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்-அமைச்சர் சட்டசபைக்கு வரும்போது நாம் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்கு வரும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருக்கிறார். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்றார்.
அமைச்சர் ரமேஷ் பேசியதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியது. இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் நேரு இதுகுறித்து பேசுகையில், "முதல்-அமைச்சர் சட்டசபைக்குள் வரும்போது எழுந்து நிற்பது குற்றம், குறை அல்ல.. அது அவரவர் நடைமுறை. திமுக ஆட்சியில் இருக்கும்போது முதல்-அமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து நிற்பது கிடையாது. எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ” என விளக்கம் அளித்தார்.