தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? 20-ந் தேதி அறிவிப்பதாக காதர் மொய்தீன் பேட்டி

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க தி.மு.க. ஆதரவு கொடுப்பது போல் பேச்சு வந்து கொண்டிருக்கிறது என ஒரு கருத்து சொல்லப்பட்டது. இது எனக்கு அதிர்ச்சியை தந்தது.
காதர் மொய்தீன்
Published on

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்பார்த்தது ஒன்று, மக்கள் கொடுத்தது வேறொன்று. அதுதான் உண்மை. த.வெ.க. ஒவ்வொரு தொகுதியிலும் கொஞ்சம் ஓட்டு வாங்குவார்கள் என்றுதான் பேசப்பட்டது.ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது கொளத்தூர் தொகுதியில் எங்கள் கட்சியின் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.

தவெகவுக்கு ஆதரவு

அப்போதே என்னிடம் வந்து, தேர்தல் கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. ஏதோ மாற்றங்கள் வரப்போகின்றன. பெண்கள் மத்தியில் நாம் நினைத்தது போல் இல்லை. தி.மு.க.விற்கு ஓட்டு போடுவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்கள். உடனே நாங்களும் தி.மு.க.விடம் கூறினோம். அதற்கு அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் தேர்தல் முடிவு வந்த பிறகுதான் தமிழ்நாட்டு மக்கள் பெரிய மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள் என்று தெரிந்தது. த.வெ.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமையக்கூடாது என்பதற்காக தி.மு.க. கூட்டணியில் இருந்த ஏறத்தாழ எல்லா கட்சிகளும் நிபந்தனை இல்லாமல் த.வெ.க.வுக்கு ஆதரவை கொடுத்தோம்.

எங்களைப் பொறுத்தவரையில் அண்ணா காலத்தில் இருந்தே தற்போது உள்ள மு.க.ஸ்டாலின் வரை நீண்ட நாள் நட்புடன் இருந்தோம். அவர்களை விட்டு வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதாக தெரியவில்லை.த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்காமல் தப்பு செய்தால் முஸ்லிம் சமுதாயத்தை பாதிக்கும். முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுக்காததால் பா.ஜனதா ஆட்சி தமிழ்நாட்டில் வந்து விடும். அதற்கு நீங்கள் காரணமாகக் கூடாது என்று என்னிடம் பலர் கூறினார்கள். உடனே நாங்கள் மு.க.ஸ்டாலினிடம் சென்றபோது, அங்கு வேறு ஒரு யோசனையில் இருந்ததாக எனக்கு சொல்லப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க தி.மு.க. ஆதரவு கொடுப்பது போல் பேச்சு வந்து கொண்டிருக்கிறது என ஒரு கருத்து சொல்லப்பட்டது. இது எனக்கு அதிர்ச்சியை தந்தது.

உடன்பாடு இல்லை

அடுத்த நாள் திருமாவளவனை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்றார்கள். அதற்கு நான், திருமாவளவன் தற்போது எம்.எல்.ஏ.வாகக் கூட இல்லையே என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 6 மாதங்களில் எம்.எல்.ஏ.வாக்கி விடலாம் என்றார்கள். இந்த யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினேன். ஏனென்றால் மக்கள் ஓட்டு போட்டது விஜய்க்குத்தான். அவர் ஆட்சி அமைக்க முடியாது என்று சொல்லியிருந்தால் தி.மு.க., அ.தி.மு.க. சேரலாம், அல்லது திருமாவளவன் ஆட்சி அமைக்கலாம் என்று கூறியிருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.

20-ந் தேதி அறிவிப்பு

ஆனால் அவரை அழைக்காமல் மாற்றுக் கருத்தை முன்னெடுப்பது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது. மேலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலும் நல்லதல்ல என்ற முறையில்தான் நாங்கள் உயர் மட்டக் குழுவை கூட்டி த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தோம்.வருகிற 20-ந் தேதி கட்சி பொதுக்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில்தான் தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com