பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலத்திற்கு வழங்குவதா..? - டி.டி.வி. தினகரன் கண்டனம்

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலத்திற்கு வழங்குவதா..? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை அச்சிடும் பணியில் 30 சதவிகிதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் விளங்கி வரும் நிலையில், அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்துவிட்டு, அண்டை மாநிலத்திற்கு அப்பணியை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசின் இம்முடிவால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடைபெறும் இந்த அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அச்சக உரிமையாளர்களோடு, அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிடும் அளவிற்கான அச்சகங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு அப்பணியை வழங்குவது ஏன்? என அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, அச்சுத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கே முழு பணியையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com