கட்சி ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக முதல்-அமைச்சரை வசைபாடுவதா? - விஜய்க்கு அன்பில் மகேஷ் கேள்வி

விஜய் விசிலடிச்சான் குஞ்சுகள் போல் பேசிவிட்டார் என தோன்றுகிறது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு,
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தி.மு.க.வினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் பேச்சு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், சுமார் 50 ஆண்டுகாலம் பொது வாழ்க்கையில் இருந்து, பல கஷ்டங்களை கடந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அப்படிப்பட்டவரை இப்படி பேசுவது உகந்ததா?
விஜய்யின் குடும்பத்தினர் கலைஞர் கருணாந்தியுடனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடனும் நன்றாக பழகிய குடும்பம்தான். ஆனால் இன்று ஒரு கட்சி ஆரம்பித்துவிட்டோமே என்பதற்காக இதுபோல் வசைபாடுவது ஏற்கத்தக்கதா?
முதல்-மாநாட்டில் பேசும்போது ‘நம்மை பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகள் என்று மற்றவர்கள் சொல்லிவிடக் கூடாது, நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என விஜய் கூறினார். அவரது தொண்டர்கள் இப்போது முதிர்ச்சி ஆகி விட்டனர். ஆனால் இரண்டாவது மாநாட்டில் விஜய் தான் விசிலடிச்சான் குஞ்சுகள் போல் பேசிவிட்டார் என தோன்றுகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






