

சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
இ.பி.எஸ். இன்று காலை டெல்லி சென்றது குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கூட்டணி கட்சியில் உள்ள தலைவரை சந்திப்பதற்கு இ.பி.எஸ் டெல்லி சென்றிருக்கிறார். அவர் டெல்லி சென்றாலே ஏதும் குழப்பம் தான் என்று ஏன் எடுக்கிறீர்கள் என்று தமிழிசை கூறினார்.
தமிழகத்தில் ஒரு தலைவர் கூட்டணியில் உள்ள தலைவரை சந்திக்க டெல்லி சென்றால் அது குழப்பம். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை ஆறு தொகுதியில் போட்டியிட்டு இந்த முறை திமுக கூட்டணியில் ஐந்து இடங்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழுத்தம் கிடையாது. மதிமுகவும் கடந்த முறை ஆறு தொகுதியில் போட்டியிட்டு இந்த முறை அழுத்தத்தின் காரணமாக நான்கு தொகுதிகள் திமுக கொடுத்திருப்பது அழுத்தம் கிடையாதாம்.
ஆனால் அந்த கூட்டணியில் எந்த அழுத்தமும், குழப்பமும் இல்லையாம், பாஜக என்னும் பூச்சாண்டியை காட்டி நீங்கள் அடிமைத்தனமாக தொகுதிகளை குறைத்து வாங்கி விட்டு நாங்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் கூறி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். திமுகவின் கூட்டணி கட்சிகள் பாஜகவை காண்பித்து தான் தனது கூட்டணி பகிர்வை பெறுகிறார்கள்.
கனிமொழியும் டெல்லியில் ராகுல் காந்தியை ஏன் பார்த்தார்கள்? அமித்ஷா தமிழகத்திற்கு வந்து இங்குள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார். மோடிஜியும் தமிழகம் வந்து ஓரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இருக்கிறார். மாநில கட்சியில் உள்ள ஒருவர் தேசிய கட்சியில் உள்ள ஒருவரை நிர்வாக ரீதியாக நட்பு ரீதியாக சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.