கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் காட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
கோப்புப்படம்
Published on

சென்னை,

எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் அரசு காட்டியிருக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.

வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதல்-அமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?

எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com