தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்

தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அமெரிக்கா தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்வின்பிரபு நிருபரிடம் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஒரு கன்டெய்னரில் 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே லாபம் கிடைக்கும். அதை விட வரி மிகவும் அதிகமாக இருப்பதால் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட கன்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த கன்டெய்னர்கள் அமெரிக்காவை சென்றடைய இன்னும் 15 நாட்கள் வரை ஆகும். அதுவரை ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா? என்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அதன்பிறகும் ஏற்கப்படாதபட்சத்தில் அந்த கன்டெய்னர்கள் மீண்டும் கொண்டு வரப்படும். அதுவரை காத்திருக்கிறோம். அந்த கடல் உணவு வேறு நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென்றால், அந்த கன்டெய்னரை பிரித்து, அதில் வேறு நாட்டுக்கு உரிய முறையில் ‘பேக்கிங்’ செய்ய வேண்டும். இது அதிக பொருட்செலவை ஏற்படுத்தும்.
அதேபோன்று அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் இறால், கணவாய், நண்டு, ஆக்டோபஸ் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நிறுவனங்களில் தற்போது வரை பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு மாதங்கள் வரை இந்த பணியை தொடர முடியும். இந்த தொழில் முற்றிலும் மனிதவளத்தை நம்பி இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் உற்பத்தி மற்றும் தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






