தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே மோதல் - பரபரப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே மோதல் - பரபரப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் குவிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை எதிர்ப்பாளர்கள் விரட்டியடித்தனர். உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com