அனுமதியில்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அனுமதியில்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சிவமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு கடந்த 1987-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின்படி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பலர் நிலத்தடி நீரை எடுக்கின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். எனவே, அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீரின் அளவு குறைகிறது. எனவே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் இழுத்து மூடவேண்டும். இந்த ஆலைகள் உரிய அனுமதியை எதிர்காலத்தில் பெற்றாலும், ஐகோர்ட்டு அனுமதியில்லாமல், இந்த ஆலைகள் இயங்க அரசு அனுமதிக்கக்கூடாது.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் எத்தனை குடிநீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன? எத்தனை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களுடன் தமிழக பொதுப்பணித்துறையின் நிலம் மற்றும் நிலத்தடி நீர்வளம் புள்ளி விவர மையத்தின் தலைமை என்ஜினீயர் வருகிற பிப்ரவரி 6-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com