திருவாரூரில், கதவணை சீரமைப்பு பணிகள் மும்முரம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பையொட்டி திருவாரூரில் கதவணை சீரமைப்பு, சுவர்களில் வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
திருவாரூரில், கதவணை சீரமைப்பு பணிகள் மும்முரம்
Published on

திருவாரூர்;

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பையொட்டி திருவாரூரில் கதவணை சீரமைப்பு, சுவர்களில் வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்கள்

திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இது தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாடுகளை வளர்த்து பால் விற்பனை, ஆடுகளை இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி(திங்கட்கிழமை) பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதத்தில் திறக்கப்பட்டது.

வேளாண் இடுபொருட்கள்

இதனால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிக அளவு நடைபெற்றது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. தற்போது திருவாரூரில் முன்பட்ட குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஆழ்குழாய் மூலம் நாற்றங்கால் பணிகளையும் செய்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள், இடுபொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கதவணை

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அனைத்து அதிகாரிகளும் ஆய்வு செய்து பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தி உள்ளனர். தண்ணீர் திறக்க சில நாட்களே உள்ள நிலையில் திருவாரூரில் உள்ள முக்கிய நீர்வழித்தடத்தில் உள்ள மதகுகள், கதவணைகள், சுவர்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள கல்பாலத்தில் உள்ள துருபிடித்த கதவணைகளை அப்புறபடுத்திவிட்டு புதிய கதவணை பொருத்துகின்றனர். மேலும் வெல்டிங் செய்யும் பணிகள், சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com