நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 3,043 பேர் எழுத உள்ளனர்


நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 3,043 பேர் எழுத உள்ளனர்
x

திருநெல்வேலியில் நாளை நடைபெறும் எஸ்.ஐ. எழுத்துத் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (Taluk & AR) பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை (21.12.2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. தேர்வானது இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. முதன்மை எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், தமிழ்மொழி தகுதித் தேர்வு மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரையும் நடைபெற உள்ளது.

தேர்வு மைய விவரங்கள்:

1) பாளையங்கோட்டை, தியாகராஜநகர் புஷ்பலதா வித்யா மந்திர சீனியர் செகண்டரி பள்ளியில் 113 ஆண் விண்ணப்பதாரர்கள், 930 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 1,043 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

2) திருநெல்வேலி, காந்திநகர் ராணி அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (பெண்கள்) 2,000 ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதன்படி மொத்தமாக 2,113 ஆண் விண்ணப்பதாரர்களும், 930 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 3,043 விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

மேற்சொன்ன தேர்வு பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மொத்தம் 253 அலுவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவுரைகள்:

தேர்வு நுழைவுச் சீட்டு (Hall Ticket), புகைப்படம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரிஜினல் அடையாள அட்டை (ID Proof) ஏதேனும் ஒன்று மற்றும் கருப்பு பந்து முனைப் பேனா மட்டுமே அனுமதிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள், முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதித் தேர்வு முடிந்த பிறகு தான், தேர்வு மையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இடைவெளியில் தேர்வு மையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதியில்லை.

தேர்வாளர்களுக்கு காலை தேர்வு முடிந்தவுடன், தேவையான உணவினை அவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்கு உள்ளேயே கட்டண அடிப்படையில் வழங்க கேன்டீன் வசதி செய்யப்பட்டுள்ளது.

செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், மின்னணு சாதனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.

இந்த தேர்வில் பங்கேற்கும் அனைத்து தேர்வாளர்களுக்கும், சிறப்பான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story