நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்


நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்
x

தூத்துக்குடியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெறும் 4 மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு ஸ்டாலில், தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம்.

தூத்துக்குடி

நாளை நடைபெறவுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2025-ம் ஆண்டிற்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை (21.12.2025 ஞாயற்றுகிழமை) காலை 10 மணிமுதல் 12.30 வரை முதன்மை தேர்வும், மதியம் 3.30 மணிமுதல் 5.10 மணி வரை தமிழ் மொழி தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 1. பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, 2. வ.உ.சி. கல்லூரி, 3. கிரேஸ் இஞ்சினியரிங் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் ஆண் விண்ணப்பதாரர்களும், 4. காமராஜ் கல்லூரி தேர்வு மையத்தில் பெண் விண்ணப்பதார்களும் என மொத்தம் 5,146 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

மேற்சொன்ன தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்:

தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கருப்பு நிற பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தேர்வுக்கூட (Hall Ticket) சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.

செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ப்ளுடூத் போன்ற எல்க்ட்ரானிக் கருவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு காலை 8 மணி முதல் 9.30 மணி வரையும், தமிழ் தகுதித் தேர்வுக்கு மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் (Exam Hall) செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் மேற்படி காலை நேரத்தில் தேர்வு மையத்திற்கு வந்த விண்ணப்பதார்கள் தமிழ் தகுதி தேர்வு முடியும் வரை தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது.

தேர்வர்கள் உணவு அருந்துவதற்காக மேற்சொன்ன 4 மையங்களிலும் உணவு ஸ்டால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம். Gpay, Phonepe போன்ற மொபைல் பண பரிவர்த்தனை செய்வதற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. மேற்சொன்ன தேர்விற்கான விதிமுறைகளை விண்ணப்பதாரர்கள் கடைபிடித்து தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story