கள்ளக்காதலை கண்டித்த சித்தப்பா.. விவசாயி செய்த வெறிச்செயல் - திடுக்கிடும் தகவல்

செல்வராஜ்
போலீசார் விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் அவர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பள்ளக்குழிப்பட்டி கிராமத்தில் இருந்து ஊர்புறம் நோக்கி செல்லும் சாலையோரத்தில் முதியவர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது பள்ளக்குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 60) என்பதும், பேரக்குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதற்கிடையே செல்வராஜ் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்ததால் சம்பவ இடத்திலேயே தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். அப்போது அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர் கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது செல்வராஜின் அண்ணன் மகன் துரைசாமி, விவசாயி. இவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இதை செல்வராஜ் அவ்வப்போது கண்டித்து வந்தார். இதில் ஆத்திரமடைந்த துரைசாமி, சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சித்தப்பா செல்வராஜை வழிமறித்து திட்டி, தலையில் கல்லை போட்டு கொன்று இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து துரைசாமியை போலீசார் கைது செய்தனர்.






