

பரமக்குடி,
சித்தா மருந்து நிறுவனங்களின் கணக்குகளை தவறாக பயன்படுத்தி டாக்டரிடம் ரூ.1.29 கோடி மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைசியர் வீதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 65). சித்தா டாக்டரான இவர், மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக 3 நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அதில் பரமக்குடியை சேர்ந்த சரண்யா, பூபாலன், கணேஷ் பாண்டி, வடிவேல் முருகன் ஆகிய 4 பேரும் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகள், மருந்துகள் விற்பனை விவரம், பணப்பரிவர்த்தனை என அனைத்தையும் டாக்டர் வரதராஜன் செல்போனின் மூலம் சரண்யா, பூபாலன் ஆகியோர் மேற் கொண்டு வந்தனராம்.
இந்நிலையில் 2024-ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனங்களுக்கு வரும் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி சரண்யா, பூபாலன், கணேஷ் பாண்டி, வடிவேல் முருகன் ஆகிய 4 பேரும் தங்களது வங்கிக்கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி முறைகேடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் சரண்யா, தன் தாயார் ராமுலட்சுமி, உறவினர்கள் ராம்குமார், ராஜேந்திரன், செல்வி, கார்த்திகேயன் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கும் பணம் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் சித்த மருந்தகத்தில் வேலை பார்க்கும் டாக்டர் ஒருவர் வரதராஜனின் செல்போனில் இருந்த குறுஞ் செய்திகளை சரண்யா அழித்து கொண்டிருப்பதை பார்த்தார். இதுகுறித்து அவர் சரண்யாவிடம் கேட்டார். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த டாக்டர் இது குறித்து வரதராஜனிடம் தெரிவித்தார். உடனே வரதராஜன் வங்கிக்கணக்குகளை சரிபார்த்தபோது அவருக்கே தெரியாமல் பணம் வேறு கணக்குக்கு சென்றிருப்பது தெரியவந்தது.
மொத்தமாக ரூ.1 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரம் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பூபாலன், வடிவேல் முருகன், சரண்யா, அவரது தாயார் ராமுலட்சுமி, உறவினர்களான ராம்குமார், ராஜேந்திரன், செல்வி, கார்த்திகேயன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இதுதொடர்பாக பெருமாள் கோவில் படித்துறையை சேர்ந்த ராமுலட்சுமி (51), பாசிபவளக்கார தெருவை சேர்ந்த வடிவேல் முருகன் (51) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.