15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிலம்ப பயிற்சியாளர் போக்சோவில் கைது

சிலம்ப பயிற்சியாளர் ஒருவர், விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று சிலம்ப பயிற்சி கொடுத்தபோது, அங்கு பயிற்சி பெற்ற 15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிலம்ப பயிற்சியாளர் போக்சோவில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் க.சென்றாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பெரிய அப்பணசாமி (வயது 37). இவர் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பலருக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வந்தார். இதே போன்று விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று பெரிய அப்பணசாமி வழக்கம் போல் சிலம்பம் பயிற்சி கொடுத்துள்ளார்.

அப்போது அவர், அங்கு பயிற்சி பெற்ற 15 வயது சிறுமி ஒருவரிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பல முறை அந்த சிறுமியிடம் பெரிய அப்பணசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மட்டுமின்றி, ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை விளாத்திகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அளித்த தகவலின்பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து சிலம்ப பயிற்சி ஆசிரியர் பெரிய அப்பணசாமியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்கள் இதுபோன்ற சிலம்பம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் யார் என்பது குறித்த முழு விவரம் தெரிந்து அவர்களின் தனி ஒழுக்க நடவடிக்கை குறித்து தெரிந்த பின்பே பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவிகளிடம் சிலம்ப ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் போன்ற ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக செவி வழியாக வரும் தகவல் கிடைக்கும்போது, அந்த ஆசிரியர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com