

சென்னை,
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பட்டு வாரியத்தின் ஓர் அமைப்பான 'இந்திய சில்க் மார்க் அமைப்பு' சார்பில், சென்னையில் 5 நாட்கள் பிரமாண்ட 'சில்க் மார்க்' கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியை மத்திய மந்திரி கிரிராஜ் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நாளை தொடங்கும் இந்த கண்காட்சி, வரும் 27-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்திய பட்டின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், 'சில்க் மார்க்' தர முத்திரை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். சர்வதேச பட்டு வளர்ப்பு ஆணையத்தின் 27-வது மாநாட்டை ஒட்டி நடைபெற உள்ள இக்கண்காட்சியில், 23-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளை சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் இந்திய பட்டு உற்பத்தி துறையினர் பங்கேற்கின்றனர்.
இக்கண்காட்சியில் மத்திய பட்டு வாரியத்தின் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டுப்புழு வளர்ப்பு முதல் பட்டு துணி தயாரிப்பு வரையிலான செயல்முறைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், இந்தியாவின் 4 முக்கிய பட்டு வகைகளான மல்பெரி, தசார், ஏரி, மூகா ஆகியவற்றின் சிறப்புகளையும் பார்வையாளர்கள் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் சுமார் 7,500 'சில்க் மார்க்' அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 1,700 பேர் உள்ளனர். சுமார் 20 அரங்குகளுடன் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் ஆர்.எம்.கே.வி. சில்க்ஸ், போத்தீஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும், நாடு முழுவதிலுமிருந்து நெசவாளர்கள் மற்றும் பட்டு தொழில்முனைவோரும் கலந்து கொள்கின்றனர்.
இதில் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளிலான பட்டு புடவைகள், ஆடைகளை பார்வையிடவும், வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், நவீன ஆடை வடிவமைப்புகளில் இந்திய பட்டு ஜவுளியின் பயன்பாடு எடுத்துக்காட்டப்பட உள்ளது. உண்மையான பட்டு துணியை அடையாளம் காணுதல் மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் நடைபெறும் இக்கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் பட்டு பிரியர்கள் திரளாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.