

சேலம் மாவட்டம் பிரமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிண்ட்ரல்லா (வயது 21). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் நவீன்குமார் சேலத்தில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமான 2 வருடத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வேலை நிமித்தம் காரணமாக குரோம்பேட்டையில் நண்பர்களுடன் தங்கி சின்ட்ரல்லா வேலைக்கு சென்று வந்தார். பின்பு அருகிலேயே தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் வெகு நேரமாகியும் அவர் வீட்டின் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சின்ட்ரல்லா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில், தனது கணவர் நவீன்குமாரை தனிகுடித்தனம் நடத்துவதற்காக சென்னைக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் சம்மதிக்காததால் செல்போனில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்த சின்ட்ரல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.