

சென்னை,
பெண்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, சுயசார்புடன் பொருளாதாரத்தில் உயர வழிவகுக்கும் கூட்டுறவுத்துறை - ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
"கூட்டுறவே நாட்டுயர்வு" என்ற உன்னதத் தாரக மந்திரத்திற்கு ஏற்ப, குடும்பத்தின் ஆணிவேராகத் திகழும் பெண்களின் பொருளாதார தற்சார்பை உறுதி செய்வதிலும், அவர்களைத் தன்னம்பிக்கை மிக்க தொழில் முனைவோராக உயர்த்துவதிலும் கூட்டுறவுத்துறை மகத்தான பங்காற்றி வருகிறது.
பெண்களின் பொருளாதார தற்சார்பை உறுதி செய்யவும், அவர்களைத் தொழில் முனைவோராக உயர்த்தவும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சார்பில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர்கள் ஆகியோர் கடனுதவி பெற்று பயனடையலாம்.
அவ்வாறு நடப்பாண்டில் நவம்பர் 2026 வரை 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (PACCS) மூலம் 22,972 பயனாளிகளுக்கு ரூ.1,773.37 கோடியும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் (CCB) மூலம் 13,344 பயனாளிகளுக்கு ரூ.1,432.02 கோடியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் (UCB) மூலம் 973 பயனாளிகளுக்கு ரூ.96.56 கோடியும், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (UCCS) மூலம் 641பயனாளிகளுக்கு ரூ.69.43 கோடியும், மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் (LAMPS) மூலம் 3,154 பயனாளிகளுக்கு ரூ.29.50 கோடியும், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி (TNSACB) மூலம் 285 பயனாளிகளுக்கு ரூ.27.60 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
கந்துவட்டிப் பிடியிலிருந்து மக்களை மீட்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் மகளிர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெற்றுப் பயன்பெறுமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் தேவையான உதவிகளைப் பெற 98840 00845 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.