பெட்ரூமில் மயங்கி கிடந்த பாடகி: தற்போது வெளியான புதிய தகவல்


பெட்ரூமில் மயங்கி கிடந்த பாடகி: தற்போது வெளியான புதிய தகவல்
x
தினத்தந்தி 5 March 2025 1:28 PM IST (Updated: 5 March 2025 3:29 PM IST)
t-max-icont-min-icon

பாடகி கல்பனாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தநிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சென்னை,

பிரபல சினிமா பின்னணி இசை பாடகி கல்பனா (வயது 44). பல சினிமா பாடல்களை பாடியுள்ள இவர், சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வந்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள நிஜாம் பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்குள்ள படுக்கை அறையில் கல்பனா சுயநினைவின்றி கிடந்ததாக தெரிகிறது.

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பாடகி கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர். இவருடைய தந்தை டி.எஸ். ராகவேந்தர் ஒரு நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர். அவரது அம்மாவும் பின்னணி பாடகர். பாடகி கல்பனா 1000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானவர் கல்பனா. தமிழில் 'புன்னகை மன்னன்', 'பூ பூவா பூத்திருக்கு', 'ஆண்பாவம்' என பல தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். டப்பிங் ஆர்ட்டிஸ்டாகப் பணிபுரிந்திருக்கிறார். ஐந்தரை வயதில் பாடும் வாய்ப்புக் கிடைத்து. 'என் ராசாவின் மனசுல' படத்தில் பாடி திரையுலகில் பிரபலமானார். இவர் பாடிய 'கடவுள் தந்த அழகிய வாழ்வு', 'காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே', 'பெண்ணே நீயும் பெண்ணா', 'ஒரு சின்ன வெண்ணிலா போலே', 'மதுரை ஜில்லா மச்சான்தான்டா','டார்லிங் டம்பக்கு', என நிறைய பாடல்கள் பிரபலமானவை.

1 More update

Next Story