எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
சென்னை,
பீகாரில் வருகிற 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தன. எனினும், நேர்மையான முறையில் பணிகள் நடந்துள்ளன என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்யத் தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம். எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.
இதுதவிர புகைப்படம் ஒட்டி தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் என குறிப்பிட்டு உள்ளதுடன், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? என கேள்வியும் எழுப்பப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு கட்சி தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதம் கொடுத்தனர். இதன்படி, தமிழகத்தில் உள்ள 60 கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேருக்கு மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" தொடங்கியுள்ளது. எனினும், இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் விஜய் தலைமையிலான த.வெ.க. புறக்கணித்து உள்ளது. நாம் தமிழர், பா.ம.க. உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் மற்றும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வான தனியரசு ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.






