எஸ்.ஐ.ஆர். விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் ஏன்? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்


எஸ்.ஐ.ஆர். விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் ஏன்? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
x

தமிழ்நாடு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை,

பீகாரில் வருகிற 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தன. எனினும், நேர்மையான முறையில் பணிகள் நடந்துள்ளன என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டமிது என கூறி இதற்கு எதிராக போராடிட, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இதன்படி, தமிழகத்தில் உள்ள 60 கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" தொடங்கியது. எனினும், இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் விஜய் தலைமையிலான த.வெ.க. புறக்கணித்து உள்ளது. நாம் தமிழர், பா.ம.க. உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகளும் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு வருகை தந்த கட்சி தலைவர்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

இதன்பின்னர் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்றிருந்த தலைவர்கள் முன்னிலையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார். அவர் பேசும்போது, பீகாரில், பொதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன. அதுபோல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என பேசினார்.

நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே என்று பேசியுள்ளார். அதனால், நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்றும் பேசியுள்ளார்.

1 More update

Next Story