ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பலி : தாய் கண்முன்னே நடந்த சோகம்


ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பலி : தாய் கண்முன்னே நடந்த சோகம்
x

வேப்பூர் அருகே தாய் மீன்பிடித்தபோது ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழ்ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாஸ்தா. இவரது மனைவி அகஸ்தியா. இந்த தம்பதியின் மகள் சிவதர்ஷினி(வயது 8). இவள், அதே ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே ஊரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஆஷா. இந்த தம்பதியின் மகன் குணா(6). அகஸ்தியாவின் தங்கைதான் ஆஷா. எனவே இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆஷா நேற்று மாலை சிவதர்ஷினி, குணா ஆகிய 2 பேரையும் அழைத்துக்கொண்டு ஏரிக்கு சென்றார். அங்கு ஆஷா மீன்பிடித்துக் கொண்டிருந்தார். சிவதர்ஷினியும், குணாவும் ஏரியில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது 2 பேரும் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி மாயமானார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஷா கூச்சலிட்டார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் இறங்கி 2 பேரையும் தேடினர். சிறிது நேரத்தில் சிவதர்ஷினி, குணா ஆகிய 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆஷா குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்து 2 பேரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதனிடையே தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள், தம்பி ஏரியில் மூழ்கி பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

1 More update

Next Story