பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவர் கைது

அக்காள் கணவரான திருப்பதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள். இவருடைய மூத்த மகளை திருப்பதி(வயது 37) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருப்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட பெண்ணின் 2-வது மகளான 16 வயது சிறுமி ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றபோது டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில், மாணவி 45 நாள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், தனது மகளிடம் விசாரித்தார்.
அப்போது தனது அக்காள் கணவரான திருப்பதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.






